திருமலை: ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆசையால் 70 வயது முதியவர் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முயற்சிக்கு வயது தடையில்லை என்பதற்கு உதாரணமாக தெலங்கானாவில் ஒரு சாதனை நடந்துள்ளது. அதுபற்றிய விவரம்:
தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தை சேர்ந்த கால்ரெட்டி (70) என்பவர் முடிவு செய்தார். ஆனால் 10ம் வகுப்பு படிக்கவில்லை.
ஆனால் தனது பதவி ஆசையால் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற கடும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக மாலையில் நடைபெறும் திறந்தவெளி முதியோருக்கான சிறப்பு வகுப்பில் சேர்ந்தார். தினமும் வீட்டு பாடங்களையும் ஒழுங்காக செய்துள்ளார். மகன், மகள், பேரன், பேத்திகள் உள்ள நிலையில் கால்ரெட்டி, பெரும்பாலான நேரத்தை படிப்புக்கே செலவிட்டார். இரவு, பகல் என தீவிரமாக படித்து தேர்வுக்கு தயாரானார். அவருக்கு குடும்பத்தினரும் ஊக்கம் அளித்தனர்.
கடந்த (2021-22) கல்வியாண்டில் திறந்த நிலைப்பள்ளி பிரிவில் ஜரசங்கம் ஜில்லா பர்ஷத் உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதன் முடிவுக்காக காத்திருந்தார். தேர்வு முடிவில் இவர் தேர்ச்சி என தெரியவந்தது. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்து குடும்பத்தினருக்கும் கிராமத்தினருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
மேலும் பள்ளி முதல்வர் போச்சையாவிடம் இருந்து கால்ரெட்டி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை நேற்று பெற்றார். 70 வயதிலும் தீவிர முயற்சி எடுத்து படித்து தேர்ச்சி பெற்ற கால்ரெட்டி, அனைவருக்கும் உதாரணமாக உள்ளார் என்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.