கிண்டி பல்நோக்கு மருத்துவமனை 2023 ஜூன் மாதம் திறக்கப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை 2023 ஜூன் மாதம் திறக்கப்படும் என அதை இன்று நேரில் ஆய்வு செய்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும்,  கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதற்கான கட்டுமான பணியை 2021ம் ஆண்டு  மார்ச் மாதம் 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த பல்நோக்கி மருத்துவமனைக்கு, கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வை, கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு வரும்  புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை   5.50 லட்சம் சதுர அடியில் 7 தளங்களுடன் 1000படுக்கை வசதிகளுடன் கட்டப்படுகிறது. வருகிற 2023 செப்டம்பர் மாதம் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், 2023ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

இந்த மருத்துவமனைக்கு, கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுவதாக தெரிவித்தவர், அனைத்து நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இந்த ஆஸ்பத்திரி உதவிகரமாக இருக்கும். அதே போல் இந்த வளாகத்தில் முதியோருக்காக தனியாக ஒரு ஆஸ்பத்திரி கட்ட கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 87 கோடி ஒதுக்கியது. இந்த ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் 2019-ல் முடிவடைந்த நிலையில் கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ரூ. 4 கோடி மதிப்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளன என்றும், அந்த மருத்துவமனை  விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் மா.சு.வின்  இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விசுவநாத், மருத்துவ கல்வி பணிகள் இயக்குனர் டாக் டர் சாந்திமலர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.