சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய முயற்சி – குழந்தைகள் முதியோருக்கு தனி வரிசை

சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தனி வரிசை ஏற்படுத்தப்படும் என தேவஸ்வம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 28 நாட்கள் பூர்த்தி அடைந்த நிலையில், பக்தர்களின் வருகை தினசரி 60 ஆயிரம் முதல் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பம்பையில் உள்ள ஸ்ரீராமசகேதம் மண்டபத்தில் நடைபெற்றது.
image
இந்த கூட்டத்தில் கேரள தேவஸ்வம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ், தலைமைக் கொறடா டாக்டர். என்.ஜெயராஜ், மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஐயர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கேரளா தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியபோது.
image
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிந்தையது என்பதால், சபரிமலை தரிசனத்திற்கு எதிர்பார்த்ததை விட சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
image
இதற்காக மாற்று நடவடிக்கைகள் விரைவில் பின்பற்றப்படும். அதன் ஒரு பகுதியாக குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தனி வரிசைகள் அமைக்கப்படும். இவர்களுக்காக சிறப்பு தனி வரிசைகள் அமைக்கப்படும்போது, குழுவாக வரும் பக்தர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
image
கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெர்ச்சுவர் க்யூ மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்படும். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும். இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.