சபரிமலை: பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு -ஐஆர்பி போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இதற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐ.ஆர்.பி.) கூடுதல் போலீசார் வரும் 18-ம் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும், கேரள டிஜிபி அனில் காந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 1-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா பொது முடக்கத்தால், மூன்று ஆண்டுகளுக்குப் பின் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தினசரி பக்தர்களின் வருகை 70 ஆயிரம் கடந்து ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஆர்.ஏ.எஃப்., சிவில் போலீசார் என 10 நாட்களுக்கு ஒரு “பேட்ஜ்” என்று 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் அதிகளவான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, ஐயப்ப பக்தர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) கூடுதல் போலீசார், வரும் 18-ம் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கேரளா டிஜிபி அனில் காந்த் சபரிமலையில் தெரிவித்துள்ளார்.
image
ஒரு நிமிடத்தில் 80 பேர், 18-ம் படி ஏறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்து தரப்பட உள்ளது. கானகப் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு அதிக வசதிகள் செய்து தரப்படும். மேலும், தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் தாமதமாகாமல் இருக்க, தரிசனம் முடித்த பக்தர்கள் மேம்பாலம் வழியாக திரும்பிச் செல்லவும் வசதி செய்து தரப்படும் என டிஜிபி கூறினார்.
image
முன்னதாக சபரிமலை சன்னிதானம், மாளிகைப்புரம், 18-ம் படி ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சன்னிதானத்தில் காவலர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதியை பார்வையிட்டார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி ஜெயமோகன் நம்பூதிரி ஆகியோரையும் சந்தித்து டிஜிபி ஆலோசனை நடத்தினார். தென் மண்டல ஐஜி பிரகாஷ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆனந்த், பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தலைவர் ஸ்வப்னில் மகாஜன் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.