நாமக்கல்லில் ஒரு அரசு ஊழியர், எட்டாவது படிக்காமலேயே, அரசு பணியையை 25 வருடங்கள் செய்து வந்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் உள்ள ஆரியூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் அலுவலக உதவியாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். இந்த பணிக்குரிய அப்போதைய கல்வித்தகுதியான எட்டாம் வகுப்பை இவர் தேர்ச்சி பெற்றதாக சான்று கொடுத்துதான், கடந்த 25 வருடங்களாக பணியில் இருந்து வந்திருக்கிறார்.

அவர் பணியில் சேர்ந்தபோது, போலியான கல்வி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக, தற்போது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவரின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்கும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, வேலையில் சேரும்போது ஜெயராமன் கொடுத்த கல்வி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போலியானது என்று தெரியவந்தது. இதனால், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்தார். போலி ஆவணம் கொடுத்து 25 ஆண்டுகளாக அரசு ஊழியராக பணியாற்றி வந்த ஒருவர், தற்போது 57 வயதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.