சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் வரும் 19-ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். அதே பலத்துடன் வரும் 17-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் நிலைபெறும்.
தொடர்ந்து இலங்கை அருகே சென்று, பின்னர் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
இதன் தாக்கத்தால் வரும் 19-ம் தேதி தென் மாவட்டங்களிலும், வரும் 20, 21-ம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வரும் 22-ம் தேதி புதுச்சேரி முதல் திருவள்ளூர் வரை உள்ள கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை வாய்ப்பு குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்.
தற்போது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு (டிச. 16, 17, 18) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19-ம் தேதி சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய , லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.