`மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வரும்’ – பொன்னார் பேச்சின் பின்னணி என்ன?!

பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சென்னை கமலாலயத்தில் 14/12/2022 அன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மற்ற நிர்வாகிகளான கனகசபாபதி, இராம ஸ்ரீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி ஆகியோர் பங்கெடுத்தனர்.

பொன் ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம்

இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், “மக்களவைத் தேர்தல், கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் அளவில் இருந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதம் முதல் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கவுள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசென்று, அந்த திட்டங்களால் தமிழக மக்கள் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

பாஜக மாநில மையக் குழுக் கூட்டம்

வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. அதிமுக-வுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜக-தான் தலைமை வகிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில தலைவர் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டார். இந்த கூட்டணியில் புதிதாக மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. இது தேர்தலுக்கு ஆறு மாததிற்கு முன்புதான் முடிவாகும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திலிருக்கும் 39 தொகுதிகளிலும் போட்டியிடும். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று முடிவு செய்து எல்லா தொகுதிகளிலும் வேலை பார்க்கிறோம்” என்று தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றும், அக்கூட்டணி வெற்ற பெற முடிவு செய்து எல்லா தொகுதிகளிலும் வேலை பார்க்கிறோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசி இருப்பது கவனம் பெறுகிறது. ஏனென்றால், சமீபத்தில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க உயர்மட்ட கூட்டம் டெல்லியில், தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 8-ம் தேதி கமலாலயத்தில் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த போது, எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும் பேசினாராம். `எத்தனை சீட் என்பது முக்கியம் இல்லை. நான் டெல்லி தலைமையிடமே இதை தெரிவித்துவிட்டேன்’ என்று அண்ணாமலை பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தெரிவித்திருந்தனர்.

மோடி, அண்ணாமலை, எல்.முருகன்

இது தொடர்பாக பா.ஜ.க சீனியர்களிடம் பேச்சுக் கொடுத்த போது, “திண்டுகல் வந்திருந்த பிரதமர் மோடி மீண்டும் டெல்லி செல்லும் போது திண்டுகல்லில் இருந்து காரில்தான் மதுரை வரை சென்றார். அப்போது அண்ணாமலையும் பிரதமருடன் காரில் சென்றர். அந்த நேரத்தில் தமிழக அரசியல் சூழல், பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசப்பட்டிருக்கின்றன. அப்போதுதான், அண்ணாமலை, மோடியிடம் தனித்து போட்டியிடுவது குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை, ‘நமது இலக்கு தமிழ்நாட்டில் எம்.பி தேர்தலில் நமது வாக்கு சதவிகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது தான். நமக்கு மூன்று சீட் ஜெயிப்பது, நாலு சீட் ஜெயிப்பது இதெல்லாம் வேண்டாம். நாம் 20% ஓட்டு வாங்க வேண்டும். அ.தி.மு.க-வுடனான கூட்டணி பற்றியெல்லாம் பின் யோசிப்போம்’ என்று பேசி இருந்தார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது. பா.ஜ.க தனித்து போட்டியிட்டால்தான் எத்தனை சதவீத வாக்குகள் வைத்திருக்கிறோம் என்பது தெரிந்து அதற்கேற்றார் போல் வேலை செய்ய முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொன்னார் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால், அதில் இருக்கும் கட்சிகள் பற்றி சொல்லவில்லை. இப்போதுவரை அ.ம.மு.க, பா.ம.க, ஐ.ஜே.கே, புதிய தமிழகம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை குழப்பம் நீடித்துக் கொண்டிருப்பதால் அது பற்றிய முடிவு தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரியும். இன்னும் சொல்ல போனால் பிரபல நடிகர் ஒருவருடனும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது.” என்கிறார்கள் பா.ஜ.க-வின் சீனியர்கள்.

ரங்கராஜ் பாண்டே

இதற்கிடையே சமீபத்தில் பா.ஜ.க சிந்தனையாளர்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, “தமிழ்நாட்டில் 2014 பாராளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது. அதில் 37 சீட் அதிமுக வெற்றி பெற்றார்கள். இப்போது குஜராத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு பா.ஜ.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே மும்முனை மோட்டி ஏற்பட்டால் ஒரு பக்கம் ஸ்வீப் ஆகிறது. ஒரு வேளை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி ஏற்பட்டால் அந்த ஸ்வீப் உங்கள் பக்கம் (பா.ஜ.க) இருக்கும் என்று நினைக்கவில்லை. அது அனேகமாக ஆளுங்கட்சியின் பக்கமாக இருக்கலாம். ஏனென்றால் இன்றைய தேதிவரை அவர்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.