மழை இல்லாததால் நீர்வரத்து குறைவு: பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் குறைப்பு

கூடலூர்: முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழை நின்று போனதால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 2105 கனஅடியாக இருந்தது. நேற்று மதியம் முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று போனதால், இன்று காலை அணைக்கு நீர்வரத்து 486.94 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால், நேற்று அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1100 கனஅடி என திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, இன்று காலை முதல் வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 141.40 அடியாகவும், அணையின் இருப்புநீர் 7504 மி.கனஅடியாகவும் உள்ளது. மழை எங்கும் பதிவாகவில்லை. அணை பகுதியில் மழை பெய்து நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் இன்று இரவுக்குள் அணைநீர்மட்டம் 142 எட்டிவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.