சென்னை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவருக்கும் சந்தானலட்சுமி என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக சந்தானலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதனை அடுத்து சந்தானலஷ்மிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
சந்தான லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சந்தானலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் ஜெயசீலன் புகார் அளித்தார்.
சந்தான லட்சுமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகுவதால் இந்த வழக்கை திருமங்கலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு காவல்துறையினர் மாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறான சிகிச்சையால் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் தற்பொழுது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தவறான சிகிச்சைகளால் உயிரிழப்பு தொடர்வதால் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.