புதுடெல்லி: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கான வழிவகை உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\\\\”ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவரை லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், தண்டிக்க முடியுமா? இது குறித்து நீதிமன்றம் விரிவானதொரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த சில தினங்களுக்கு முன் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,” குறிப்பாக ஒரு வழக்கை பொருத்தமட்டில் லஞ்ச புகார் கொடுத்த நபர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பிறழ் சாட்சியமாக மாறினாலோ, அந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட மற்ற சாட்சியங்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் விசாரணையை நடத்தலாம். அதில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அதன் அடிப்படையில் அந்த அரசு ஊழியரை ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் தண்டிக்கலாம். அதே போன்று அரசு ஊழியர் லஞ்சம் பெற்ற புகாரின் நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், சந்தர்ப்ப சூழல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவருக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம். மேலும் இத்தகைய லஞ்சம் பெற்ற புகாரின் கீழ் அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கில் எவ்வித சமரசமும் இன்றி நீதிமன்றங்கள் விரிவான விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.