விஜய் தான் நம்பர் 1; அதிக தியேட்டர் கொடுங்க – வாரிசு தயாரிப்பாளர் அதிரடி

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் களமிறங்க இருக்கிறது. இதனால், இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாவதால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இந்த பொங்கலை வாரிசு பொங்கலாகவும், துணிவு பொங்கலாகவும் கொண்ட ரெடியாக இருக்கின்றனர்.

வாரிசை முந்திய துணிவு

ஆனால், பிஸ்னஸ் விவகாரத்தில் முன்கூட்டியே தயாராகிவிட்டது துணிவு படக்குழு. ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு முன்பே துணிவு படத்தின் பிஸ்னஸ் விவகாரத்தை தொடங்கிய போனி கபூர், தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸை அமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் படத்தை தாங்களே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததால், ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர்.

வாரிசு ரிலீஸில் சர்ச்சை

இதனால், துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் துணிவு படக்குழு கன்பார்ம் செய்த நிலையில், விஜய்யின் வாரிசும் கோதாவில் குதித்தது. தாங்களும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்து, பிஸ்னஸை தொடங்கினர். ஆனால், தமிழ் சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெரும்பாலான தியேட்டர்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருப்பதால், துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது.

தில் ராஜூ ஓபன் டாக்

துணிவு படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் அரசல்புரசலாக வெளியான நிலையில், முதன்முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பிளார் தில் ராஜூ. 

“தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர் வாரிசு படத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி விஜய் தமிழகத்தின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். ஆனால், அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றனர். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்” என்று தில் ராஜூ கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.