கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரிடம், வெளிநாட்டு வேலை வாப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடி செய்த நபர் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர் தற்போது குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்திற்கு விஜயம் செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளார்.
மாலைத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளில் பல வேலை வாய்ப்புக்கள் இருப்பதாகவும், மாதாந்தம் 183,000 ரூபாய் சம்பளம் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.
அந்த வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க தோட்ட தொழிலாளர்களிடம், குறித்த நபர் பணம் கேட்டுள்ளார்.
ஏமாற்றப்பட்ட ஒரு இளைஞனின் தாயார் இதுதொர்பாக குறிப்பிடுகையில்
‘எனக்கு மூன்று புதல்வர்கள் உள்ளனர். மூவரையும் வெளிநாட்டு வேலைக்காக அனுப்குவதற்கு முதலில் 30,000 ரூபாய் செலுத்தினேன். பின்னர்;; மேலும் 12,000 ரூபாய் வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். என்னிடம் இருந்த எல்லா நகைகளையும் அடகு வைத்து அவருக்கு பணம் கொடுத்தேன். ஆனால் அவர் என் மகன்களை வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. அவர் எங்களை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார்’ என்றார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்கள் பணத்தைச் சேகரித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் அப்பாவி மகக்களை ஏமாற்றி, அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்று மோசடிக்கு உள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.
197 தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றிய பிரதான சந்தேகநபரையும் ஏனைய சந்தேகநபர்களையும் கண்டறிய நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.