100வது நாளாக ஒற்றுமை பயணம் சீனா போருக்கு தயாராகிறது ஒன்றிய அரசோ தூங்குகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

ஜெய்ப்பூர்: சீனா போருக்கு தயாராகி வருகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசோ அச்சுறுத்தலை புறக்கணிக்க முயற்சிக்கிறது’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாளை ராஜஸ்தானில் எட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லையில் சீனா, இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பரப்பை 2000 சதுர கிலோமீட்டர் ஆக்கிரமித்து கைப்பற்றி உள்ளது. கிழக்கு லடாக் கல்வானில் 20 இந்திய வீரர்களை கொன்றது. அதைத் தொடர்ந்து தற்போது அருணாச்சல பிரேதசத்தின் தவாங் பகுதியில் நமது படையினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

சீனாவின் இந்த அச்சுறுத்தலைப் பற்றி கடந்த 3 ஆண்டுகளாக கூறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாஜ அரசோ அதை கேட்க விரும்பவில்லை.தற்போது நடப்பது சீனாவின் அத்துமீறல் முயற்சி அல்ல. இது போருக்கானது. அவர்களின் ஆயுத தயார்நிலைகளைப் பார்த்தால், போருக்கு தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது. ஆனால் ஒன்றிய அரசோ அதை ஏற்க மறுத்து தூங்கிக் கொண்டிருக்கிறது. பாஜ அரசு, போட்டோ வெளிச்சத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி சார்ந்து பணியாற்றக் கூடிய அரசு. இந்த விஷயத்தில் வலுவாக செயல்படக்கூடிய அரசுதான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்த பாஜ செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ‘‘இது ஒன்றும் 1962ன் நேரு இந்தியா கிடையாது. மோடியின் புதிய இந்தியா. நம் நாட்டிற்கு எதிரான யாராவது கோபக்கண்ணால் பார்த்தால் கூட அதற்கான சரியான பதிலடி தரப்படும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.