ஒன்றிய சட்ட அமைச்சரின் கருத்துக்கு மத்தியில் தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டால் நிச்சயம் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய சட்ட அமைச்சரின் கருத்துக்கு மத்தியில், தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டால் நிச்சயம் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறை குறித்து அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், ‘உச்ச நீதிமன்றம் ஜாமின் மனுக்கள் மற்றும் தேவையற்ற பொதுநல மனுக்களை விசாரிக்கக்கூடாது; அரசியலமைப்பு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை மட்டும் விசாரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மின்சார திருட்டு தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று மனுதாரர் தரப்பு கூறுகிறது.

பின்னர் எதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்? தனிப்பட்ட சுதந்திர விஷயங்களில் நாங்கள் தலையிடவில்லை. உச்சநீதிமன்றத்தை பொருத்தமட்டில் எந்தவொரு வழக்கும் சிறியதும் அல்ல; மிகப் பெரிய வழக்கு என்ற ஒன்றுமில்லை. மனசாட்சிக்கும், மக்களின் சுதந்திரத்திற்கும் பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை மறுக்க முடியாது. எனவே தனிப்பட்டவரின் சுதந்திரம் தொடர்பான விஷயம் என்றால், நாங்கள் நிச்சயம் தலையிடுவோம்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.