வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2024-ம் ஆண்டுக்குள் நமது சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சரக்குப் போக்குவரத்து சார்ந்த செலவுகள் தற்போது 16 சதவீதமாக உள்ளது. இது 2024ம் ஆண்டுக்குள் ஒற்றை இலக்காக எண்ணான, 9 சதவீதமாக குறையும்.
இதனால், ஏற்றுமதி செயல்பாடுகள் ஊக்கம் பெறும். மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. 2024ம் ஆண்டுக்குள் நமது சாலை கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்திற்கு சமமாக இருக்கும். நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கட்டுமான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் மாற்று எரிசக்தி கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில் உலக நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
தற்போது நிலவரப்படி, இந்திய வாகனத் துறையின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடியாக உள்ளது. இதை ரூ. 15 லட்சம் கோடியாக உயர்த்த விரும்புகிறோம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement