சீன பொருளாதார பாதையால் ஆயுத, போதை பொருள், மனித கடத்தல்கள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்

பீஜிங்,

சீனாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டை இணைக்க கூடிய 1,700 கிலோ மீட்டர் தொலைவிலான முத்தரப்பு பொருளாதார பாதையானது சாலைகள், ரெயில்வே நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்ட பணிகளை உள்ளடக்கியது.

இந்த பொருளாதார பாதையானது மோயி ஆற்றின் குறுக்கே அமைகிறது. சாலை திட்ட பணிகள் என்ற பெயரில் மெல்ல ஒவ்வொரு நாட்டிலும் தடம் பதிக்கும் சீனா, முதலில் உணவு விடுதிகள், கரோக்கே, சலூன் உள்ளிட்டவற்றை அமைக்கிறது.

இப்படி தொடங்கும் அதன் பணியானது இறுதியில், கலாசார மாற்றத்திற்கு வழிவகுக்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டுவிடுகிறது என்று மெகாங் நியூஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

பிலிப்பைன்ஸ் அல்லது மக்காவ் அல்லது கம்போடியா அல்லது லாவோசில் காணப்படும் சூதாட்டம் போன்று மியான்மர் நாட்டின் மியாவாடி பகுதியில் ஆன்லைன் வழியேயான சூதாட்டங்களை வளர்ப்பதில் சீனா பங்கு வகிக்கின்றது.

தென்கிழக்கு ஆசியாவில், சாலை திட்ட பணிகள் பெயரில் அமைதியான, மதம் சார்ந்த மற்றும் பிறர் மீது இரக்கங்கொள்ளும் புத்த கலாசார பாதையில் இருந்து விலகி அவற்றை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை திட்டமிட்டு சீனா மேற்கொள்கிறது என அதிரடி குற்றச்சாட்டாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி மெகாங் நியூசில், லின் மாங் என்பவர் எழுதியுள்ள தகவலில், மனித கடத்தல்களை தடுக்கிறோம் அல்லது ஆயுதங்கள் அல்லது போதை பொருள் கடத்தல்காரர்களை தடுக்கிறோம் என்று கூறி கொண்டாலும், உண்மையில் அவர்கள் அனைவரும் சர்வதேச அளவில் இயங்க கூடிய கும்பலுடன் நன்றாக தொடர்பில் உள்ளவர்கள் என தெரிவித்து உள்ளார்.

நவீன தொழில் நுட்பம் உதவியுடன் டிஜிட்டல் சூதாட்ட மையம் ஆக மியான்மரை சீனா பயன்படுத்தி வருகிறது. மியான்மரில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து விட்டன.

அந்நாட்டில் உள்ள அகதிகள் பிழைப்புக்காக இந்த தொழிலில் தள்ளப்படுகின்றனர். வருவாய் உற்பத்திக்கு அடிப்படையாக இவை அமைவதனால், அரசும் இதனை கண்டும் காணாமல் உள்ளது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அது வருவாயை பாதிக்கும். இதனால், இதுபோன்ற சூதாட்டங்கள், கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் மெகாங் நியூஸ் தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.