பிரபல திரைப்பட நடிகை குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழ்த் திரையுலகில் 80 மற்றும் 90-களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள குஷ்பு, நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
குஷ்பு சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்த அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் இன்று காலமானார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, “எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு அன்புக்குரியவர்களை விடைபெறும் நேரம் வரும்.
என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் எங்களுக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. நிம்மதியாக ஓய்வெடுங்கள் #Bhaijaan” என்று பதிவிட்டுள்ளார்.