நீதிபதி தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு… மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக 2019-ம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தமிழக அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு, சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது, சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி

இந்த நிலையில் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க எம்.பி சின்ராஜ், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடமிருந்தோ அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்தோ சிபிஐ ஏதேனும் வழிகாட்டுதலைப் பெற்றுள்ளதா, சிபிஐ ஏதேனும் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதா என கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றம்

இதற்குப் பதிலளித்த மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடமிருந்து 26.09.2019 தேதியிட்ட குறிப்பை சிபிஐ பெற்றிருக்கிறது. ஆனால், சிபிஐ சரிபார்ப்பில் அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை” என்று கூறினார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி தஹில்ரமணி, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்தது. ஆனால் கொலிஜியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில்ரமணி கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.