மும்பை: மகாராஷ்டிர அரசுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. கர்நாடகாவின் சில பகுதிகளை மகாராஷ்டிரா உரிமை கோரி வருகிறது. இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் மீண்டும் எழுந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கர்நாடக பகுதிக்குள் செல்லப் போவதாக அறிவித்தனர். இதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இரு மாநில முதல்வர்களையும் டெல்லிக்கு அழைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார். மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி, மராட்டிய மன்னராக புகழ்பெற்ற சிவாஜி குறித்தும் சமூக சீர்திருத்தவாதி சாவித்ரி புலே குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் காரணங்களை முன்வைத்து, மகாராஷ்டிர அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலைநகர் மும்பையில் பேரணி நடத்தின. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், 3 கட்சிகளையும் சேர்ந்த முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மும்பையின் ஜெ ஜெ மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணி, சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் வரை சென்றது.
இந்தப் பேரணியின்போது, மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும், ஆளுநர் கோஷியாரிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மகாராஷ்டிராவின் பகுதிகளை மீட்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், சத்ரபதி சிவாஜியின் புகழுக்கு களங்கம் விளைவித்து விட்டதாகவும் பேரணியில் குற்றம்சாட்டப்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஜூன் மாதம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற மிகப் பெரிய பேரணியாக இது பார்க்கப்படுகிறது.