இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பாரத் கவுரவ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்திய ரயில்வேயில் உள்ள ரயில்களை பயன்படுத்தி பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்லலாம். அந்த வகையில், நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் சுற்றுலா ரயில் கோவையில் தான் துவங்கப்பட்டது. சவுத் ஸ்டார் என்ற பெயர் கொண்ட இந்த ரயில் கடந்த ஜூலை மாதம் முதன் முறையாக கோவையில் இருந்து சீரடி புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் தொடர்ந்து 5 முறை சீரடிக்கு சென்றது.
இந்த சுழலில் மீண்டும் சவுத் ஸ்டார் ரயில் பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளது. கோவையில் இருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலம், அரசவல்லி, ஸ்ரீகூர்மம், அன்னவரம், புருத்திகா தேவி உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
7 நாள் பயணத்திட்டத்தில் இயங்கும் இந்த ரயில் பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் கோவை வந்தடைகிறது. இந்த ரயிலில் பயணிக்க 15 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கான உணவு, தங்குமிடம் என அனைத்தையும் சவுத் ஸ்டார் ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று எம்.என்.சி நிறுவனத்தின் துணைத் தலைவர் பத்மநாபன் தெரிவித்தார். மேலும், கோவை மட்டுமல்லாது, கரூர், ஈரோடு திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.