கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலா லம்பூருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்தியசிலாங்கூர் மாநிலத்தில் படாங் கலி என்ற சுற்றுலா இடம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 94 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கணித்துள்ளது.
படாங் கலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கியிருந்தனர். இந்த கூடாரம் இருந்த பகுதியில்தான் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 53 பேரை உயிருடன் மீட்டனர். மண்ணில் புதையுண்ட 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் நிலச்சரிவில் 25 பேர் புதையுண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மீட்புப்பணியில் 500-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 அடி ஆழத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மண்ணில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சம்பவ இடத்தை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.