கருணாநிதி குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் திமுகவினர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என்பது குறித்த கேள்விக்கு:
”திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையை செம்மைப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி போன்று இல்லை. ரேஷன் கடைகளில் கைரேகை திட்டம் உள்ளது. மூத்த குடிமக்களின் கைரேகை சரியாக விழுவதில்லை. இந்த கை ரேகை திட்டத்தை தவிர்க்க வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் சாதி மத பாகுபாடு இன்றி கொண்டாடக்கூடிய திருவிழா பொங்கல் திருவிழா.
அதிமுக ஆட்சியில் 2 கோடியே 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுத்துள்ளோம். அன்றைக்கு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புப்பரிசு கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்காக அமைச்சரவை கூட்டம் கூட்ட உள்ளார். அவர் கூறியது போன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர் 5000 வழங்குவார் என்று நம்புகிறோம்.
ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்தவர்களுக்கு தான் பொங்கல் தொகுப்பு என்று கூறிவிடாமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொகை என்பது ஏழைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அது பொங்கல் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த வாக்குறுதியாவது நிறைவேற்றி கொடுங்கள் முதல்வர் அவர்களே என கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் முதல்வர் அவர்கள் கூறியது போன்று 5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.
ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சும்மா அறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது. வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் போதைப்பொருள் நடவடிக்கைகளில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை; விற்பனையாளர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 5 கிலோ 10 கிலோ எல்லாம் சாதாரண விஷயம். முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். தற்போது கூட ராமேஸ்வரத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல் 160 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று நடப்பதற்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்றார்.
இன்பநிதிக்கு கொடி பிடிப்போம் என மூத்த அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறித்த கேள்விக்கு:
”நகர்புறத்துறை அமைச்சர் கூறியது உண்மைதான். திமுக அமைச்சர்கள் அனைவரும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். கலைஞர் குடும்பத்தில் யார் அமைச்சராக வந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் குடும்பம்தான் ஆட்சி செய்வார்கள். நாம் மன்னர் பரம்பரையை தான் ஒழித்து இருக்கிறோமே தவிர, கலைஞருடைய பரம்பரையை இதுவரை ஒழிக்கவில்லை. எல்லோரும் மனதில் என்ன நினைப்பார்கள் என்றால் கலைஞர் குடும்பத்தில் இனி குழந்தை பிறக்கவோ, வாரிசு வரக்கூடாது என்றுதான் நினைப்பார்கள்.
அமைச்சர் கே.என்.நேரு எப்போதும் உண்மை பேசக்கூடியவர். எனவே இன்பநதிக்கு குழந்தை பிறந்தால்கூட அவர்களுக்கும் திமுக கொடி பிடிப்பதற்கு ஆள் இருப்பார்கள். இனிமேல் தலைவர் குடும்பத்தில் வாரிசு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அப்போதுதான் அனைவரும் தலைவராக முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வியூகம் குறித்த கேள்விக்கு:
முனைப்பாக கட்சித் தொண்டர்கள் எங்களைவிட ஆர்வமாக உள்ளார்கள். நிறைய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர். திமுகவின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியையும் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர். எனவே திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது. செயலற்ற அரசாங்கம் ஆகவும், ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காத நிலையும் உள்ளது. எங்கள் தலைமையிலான கூட்டணி எந்த கூட்டணி அமைந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்” என்றார்.
– மணிகண்டபிரபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
