மயிலாடுதுறையை அடுத்த சேந்தங்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன் (வயது 38). இவர் மயிலாடுதுறையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் விடுதி மேற்பார்வையாளராகவும் கூடுதல் பணியாக செய்து வந்துள்ளார். இவர், அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவன் ஒருவரிடம், தகாத முறையில் உறவுக்கு வற்புறுத்தியிருக்கிறார்.

இதனை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த அந்த மாணவன், அதே பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் தன்னுடைய தம்பியிடம் கூறியுள்ளார். அந்த மாணவன் தன்னுடைய அண்ணனிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது குறித்து, உடனே தன்னுடைய தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் சீனிவாசன் மேலும் சுமார் 15 மாணவர்களை மிரட்டியும், வற்புறுத்தியும் தகாத உறவில் ஈடுபட வலியுறுத்தியது தெரியவந்தது. இதற்கிடையில் மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனைப் பணியிலிருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலி பேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் காரணமாக மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மயிலாடுதுறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, “ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிக்சையில் உள்ளதால் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி காத்திருக்கிறோம்” என்றனர்.