உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசத்தின் மீது பிம்பம் பல ஆண்டுகளாக உள்ளது.
இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களை புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது. இதனால், உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறி போயுள்ளது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது கூட, இந்த விவகாரம் பற்றிய விவாதம் சூடு கிளப்பியது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் திருமணம் முடிவானது. யோகேந்திரா, கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவதற்கு பதிலாக, புல்டோசரை வழங்கி உள்ளார்.
இதற்கான காரணம் குறித்து பரசுராம் கூறுகையில், தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், பணம் ஈட்ட இந்த புல்டோசரை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.