ஸ்ரீவில்லிபுத்தூர் | கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இல்லாததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி அரங்கநாயகி(18). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அரங்கநாயகி பிரசவத்திற்காக புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அரங்கநாயகிக்கு ஞாயிறன்று காலை 6 மணியளவில் பெண் குழந்தை இறந்து பிறந்தது. தாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அரங்கநாயகி உயிரிழந்தார். இதையடுத்து ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் முன் திரண்ட அவரது உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தான் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்ததாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்குவந்த டிஎஸ்பி சபரிநாதன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அரங்கநாயகியின் உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கத்திடம் கேட்ட போது, ‘ இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

– A.கோபாலகிருஷ்ணன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.