உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை நிதி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தலை எந்த நேரத்திலேனும் நடாத்துவதற்கு தயாராக, தேர்தல்கள் ஆணைக்குழு பணத்தை ஒதுக்கியுள்ளதுடன், இதற்காக வேண்டி, 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தi இந்த வருடம் (2022) நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கமைய அது தொடர்பான மதிப்பீடுகள் நிதி அமைச்சுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன. எனவே, மாகாண சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்தலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக 5.8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வருடம் (2023) மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளுராட்சி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கலப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பிரதேச மட்டத்திலும் குறைநிரப்புப் பட்டியல் தொடர்பிலும் உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்;.
பொதுவாக தேர்தல் நடாத்துவதற்கு 60 முதல் 65 நாட்கள் வரை செல்லும். அதனால், வேட்புமனு தாக்கல் திகதி குறித்த இறுதி அறிவிப்பை இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் என்பது முழுமையான சட்ட நடவடிக்கையாகும். அதன்படி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு முதலில் வெளியிடப்படும்.
உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும், அது சட்டரீதியான அதிகாரம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.