சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான “வெர்ச்சுவல் கியூ”வின் “ஆன்லைன்’ முன்பதிவு ரத்து என சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இது முற்றிலும் தவறான தகவல் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் விளக்கம் அளித்துள்ளது. “சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தினசரி 90 ஆயிரத்திற்கு மேல் முன்பதிவு செய்ய முயலும் பக்தர்களின் பதிவு ஏற்கப்படாது.
இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தியும் செய்தியும் பரவியது. இதை யாரும் நம்ப வேண்டாம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வழக்கம் போல் இயங்கி வருவகிறது, ” என தேவஸ்வம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். சிறிது நாட்களுக்கு முன்பு அதிகப்படியான கூட்டம் கூடியதால் வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலைக் தவிர்க்க 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தரிசனம் செய்ய தனிவரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது.