கெய்ரோ : ஈரானில், ‘ஹிஜாப்’ எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட ஆஸ்கார் விருது வென்ற படத்தின் நாயகி தாரனே அலிதுாஸ்தி, 38, அந்த நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த நாடு முழுதும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன.
திரைப்பட நடிகையர், விளையாட்டு வீராங்கனையர் உள்ளிட்டோர் போராட்டங்களில் பங்கேற்று அரசுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான மோசேன் ஷெகாரி என்பவர், பொது இடத்தில் துாக்கில் தொங்க விடப்பட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகை தாரனே, ஹிஜாப் அணியாத புகைப்படத்துடன் கூடிய கருத்துகளை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து, அவரது சமூக வலைதள பக்கத்தை முடக்கிய ஈரான் அரசு, தாரனேவை நேற்று கைது செய்தது.
தவறான கருத்துகளை பகிர்தல், குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரனே அலிதுாஸ்தி, 2016-ல் வெளியான ஆஸ்கார் விருது பெற்ற தி சேல்ஸ்மேன் படத்தின் நாயகி என்பதுகுறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்