2022 தமிழ் சினிமா – டாப் 10 டிரைலர்கள்

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது, உலக சினிமா, இந்திய சினிமா ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இந்த 2022ம் ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பரபரப்பு, மோதல், விவாதம், சர்ச்சை, பிரச்னை என செய்திகளுக்குப் பஞ்சமில்லாத விதத்தில் இந்த ஆண்டு முடிய உள்ளது.

ஒரு படத்திற்கு முன்னோட்டமாக விளங்கும் டீசர், டிரைலர் ஆகியவை இந்த ஆண்டிலும் நிறையவே வெளிவந்தது. ஆனால், ஒரு சில படங்களைத் தவிர்த்து பல படங்கள் பெரிய அளவில் புதிய சாதனைகளைப் படைக்கவில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும்தான் அதிகமான பார்வைகள் கிடைக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களுக்குக் கூட பெரிய அளவில் பார்வைகள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.

இந்த ஆண்டை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிக அளவில் வெளியிடப்படவில்லை. ஆனால், டிரைலர்கள்தான் அதிகமாக வெளியாகி உள்ளன. எனவே, இந்த ஆண்டு வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

குறைந்த பட்சம் 10 மில்லியன் பார்வைகள், அதாவது ஒரு கோடி பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

டாப் 10 டிரைலர்கள்

01. பீஸ்ட் – 59 மில்லியன் பார்வைகள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியான படம். இப்படத்தின் டிரைலர் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த ஆண்டின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படம் பெற்ற 57 மில்லியன் பார்வைகளைக் கடந்து 'பீஸ்ட்' டிரைலர் புதிய சாதனையைப் படைத்தது. 'பிகில்' டிரைலருக்குக் கிடைத்த 2.4 மில்லியன் லைக்குகளையும் கடந்து 'பீஸ்ட்' டிரைலர் 3.2 மில்லியன் லைக்குகளைப் பெற்றதிலும் புதிய சாதனையைப் படைத்தது இந்த டிரைலர்.
தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் 29 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் லைக்குகள் பெற்று அதிலும் புதிய சாதனையைப் படைத்தது. 'கேஜிஎப் 2, ராதே ஷ்யாம்' ஆகியவை 'பீஸ்ட்' சாதனைக்குப் பின்னால்தான் உள்ளன.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவந்த டிரைலர்களில் 'பீஸ்ட்' டிரைலர்தான் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் என முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'வாரிசு' டிரைலர் வெளிவந்தால் முறியடிக்க வாய்ப்புள்ளது.

https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk

02. விக்ரம் – 43 மில்லியன் பார்வைகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 3ம் தேதி வெளியான படம் 'விக்ரம்'. இப்படத்தின் டிரைலர் 43 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற பெருமை இந்தப் படத்திற்குக் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் பற்றிய அறிவிப்பே ஒரு டைட்டில் டீசர் ஆக வெளிவந்தது. அந்த டீசருக்கு 34 மில்லியன் பார்வைகள் கிடைத்து படம் மீதான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகமாக்கியது. அது படத்தின் டிரைலர் வெளிவந்த போதும் எதிரொலித்தது. வித்தியாசமான கூட்டணி அமைந்ததே இந்த டிரைலரின் வரவேற்பிற்கான முக்கிய காரணம்.

https://www.youtube.com/watch?v=OKBMCL-frPU

03. வலிமை – 33.6 மில்லியன் பார்வைகள்

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி 24ம் தேதி வெளியான படம். தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு இடையில்தான் யு-டியூபில் அதிக அளவிலான போட்டிகள் இருக்கும். ஆனால், விஜய் படங்கள் படைக்கும் சாதனையை அஜித் படங்கள் முறியடிக்க முடியாமல் போவது உண்மை என்பதை அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

அஜித்தின் முந்தைய பட சாதனைகளை இந்தப் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'விஸ்வாசம்' பட டிரைலர் சாதனையைக் கூட 'வலிமை' டிரைலர் முறியடிக்கவில்லை. 'வலிமை' டிரைலர் இரண்டு யு டியுப் சேனல்களில் வெளியானது. சோனி மியூசிக் சவுத் சேனலில் 25 மில்லியன் பார்வைகளும், ஜீ ஸ்டுடியோஸ் சேனலில் 8.6 மில்லியன் பார்வைகளையும் சேர்த்து 33.6 மில்லியன் பார்வகைளைப் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=Gi83R8jEqZU

https://www.youtube.com/watch?v=DBArG6AoJw0

04. த லெஜன்ட் – 32 மில்லியன் பார்வைகள்

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், லெஜன்ட் சரவணன், ஊர்வசி ரவ்தேலா, கீத்திகா மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 28ம் தேதி வெளியான படம். இந்தப் படத்தின் டிரைலருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்றுதான். விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் ஆகியோரது படங்களைக் காட்டிலும், பிரம்மாண்டமான 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் இந்த டிரைலருக்கு அதிகப் பார்வைகள் கிடைத்துள்ளது. ஒரு 'டிரோல்' டிரைலராகப் பார்க்கப்பட்டதால்தான் இவ்வளவு பார்வைகள் கிடைத்தது என்று சொல்வோரும் உண்டு.

https://www.youtube.com/watch?v=mvQK78iCxWY

05. வெந்து தணிந்தது காடு – 20 மில்லியன் பார்வைகள்

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், சித்தி இட்னானி மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 15ம் தேதி வெளியான படம். சிம்பு, கவுதம் மேனன், ரஹ்மான், சிம்பு கூட்டணி என்பது 'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்தது.

சிம்பு நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள படம். இதற்கு முன்பு அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் 'மாநாடு' டிரைலர் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களிலும் இந்தப் படம்தான் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=AwG-AtAtiB8

06. மகான் – 20 மில்லியன் பார்வைகள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 10ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம். ஓடிடி தளத்தில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

விக்ரம் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை 'மகான்' படத்தின் டிரைலர் முறியடித்து விக்ரம் படங்களின் நம்பர் 1 டிரைலர் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=i4ORfM-q35Y

07. பொன்னியின் செல்வன் 1 – 18 மில்லியன் பார்வைகள்

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான படம். இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக பொருட் செலவில் தயாரான பிரம்மாண்டமான படம் என்று சொல்லப்பட்டது. பான் இந்தியா வெளியீடு என்பதால் இந்தப் படத்தின் டிரைலர் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் அதிகமானப் பார்வைகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழில் கூட புதிய சாதனையைப் படைக்காமல் 18 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது.

மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் என இந்திய அளவில் பிரபலங்கள் இணைந்த இந்தப் படத்தின் டிரைலர் இப்படி குறைவான பார்வைகளைப் பெற்றது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் டிரைலரை விட முதலிடத்தைப் பிடித்த 'பீஸ்ட்' டிரைலர் மூன்று மடங்கு அதிகமான பார்வைகளைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.

https://www.youtube.com/watch?v=D4qAQYlgZQs

08. கோப்ரா – 15 மில்லியன் பார்வைகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான படம். விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்கள் டாப் 10 டிரைலர்களில் இடம் பிடித்துள்ளது. வேறு எந்த ஒரு நடிகருக்கும் இப்படி அமையவில்லை. 'மகான், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களுடன் 'கோப்ரா' படத்தின் டிரைலரும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளது.
கடந்தாண்டு வெளியான 'கோப்ரா' டீசர் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 'கோப்ரா' டிரைலருக்கு 11 மில்லியன் குறைவாக 15 மில்லியன் பார்வைகள்தான் கிடைத்துள்ளது. டீசரில் ஏற்படுத்திய ஒரு எதிர்பார்ப்பை டிரைலரில் வைக்க படக்குழு தவறிவிட்டது.

https://www.youtube.com/watch?v=HsAhxHWqYwM

09. டான் – 14 மில்லியன் பார்வைகள்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் மே 13ம் தேதி வெளியான படம். சிவகார்த்திகேயன் படங்களுக்கு யு டியுபிலும், சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. இந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த இரண்டு படங்களில் வெளிவந்த முதல் படம் இந்த 'டான்'. இதன் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்குத் தள்ளி இந்த 'டான்' டிரைலர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது ஆச்சரியம்தான்.
'டான்' படத்தின் சாதனையை இந்த ஆண்டு வெளிவந்த அவரது மற்றொரு படமான 'ப்ரின்ஸ்' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவகார்த்திகேயனே மறக்கக் கூடிய ஒரு படமாகவே 'ப்ரின்ஸ்' படம் அமைந்தது.

https://www.youtube.com/watch?v=s5ak-NY6OC8

10. விருமன் – 11 மில்லியன் பார்வைகள்

முத்தையா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயக்கத்தில், கார்த்தி, அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான படம். கார்த்தி தனி கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டில் 'விருமன், சர்தார்' படங்களும், மல்டி ஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' படமும் வெளியானது. இவற்றில் 'விருமன்' படமும் டாப் 10 டிரைலர்கள் பட்டியலில் இணைந்தது ஆச்சரியம்தான். 'சர்தார்' படத்தின் டிரைலரும் கூடி 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கார்த்தி நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்களுமே 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கார்த்தியின் படங்களுக்கான வரவேற்பும், டிரைலருக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. அவரது அண்ணன் சூர்யா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தைக் காட்டிலும் கார்த்தியின் மூன்று பட டிரைலர்கள் முந்திக் கொண்டுள்ளன.

https://www.youtube.com/watch?v=aRx4-fsJ5uE

இந்த 2022ம் ஆண்டில் இதுவரையில் 180 படங்கள் வரையில் தியேட்டர்களிலும், 25 படங்கள் வரையில் ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளன. மொத்தமாக சுமார் 200 படங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் 15 படங்கள் மட்டுமே டிரைலர்களில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. டிரைலர்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்படும். அப்படி ஒரு தூண்டுதலை டிரைலர் மூலம் ஏற்படுத்தி இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றாக 'லவ் டுடே' படம் இடம் பிடித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் யு டியுபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த வருடத்தின் டாப் 10 டிரைலர்கள் பட்டியலில் விக்ரம் நடித்து வெளிவந்த 3 படங்கள் முறையே 6, 7, 8வது இடங்களைப் பிடித்துள்ளது. கார்த்தி நடித்து வெளிவந்த 2 படங்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. புதுமுக நடிகர்களின் 2 படங்களும் இதில் அடக்கம்.

ஏஆர் ரகுமான் இசையமைத்து வெளிவந்த 3 படங்களும், அனிருத் இசையமைத்து வெளிவந்த 3 படங்களும், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வெளிவந்த 2 படங்களும் டாப் 10 பட்டியலில் உள்ளன.

இந்த ஆண்டில் வந்த படங்களில் 'பொன்னியின் செல்வன், விக்ரம்' படங்களின் டிரைலர்கள் அதிகப் பார்வைகளைப் பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தைத் தந்தது.

அடுத்த 2023ம் ஆண்டில் வெளியாக உள்ள படங்களின விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' படங்களின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த டிரைலர்கள் மட்டுமல்லாது, அடுத்த ஆண்டில் வெளியாக உள்ள மற்ற படங்களான ''ஜெயிலர், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, விஜய் 67, அஜித் 62, தங்கலான், சூர்யா – சிவா படம், கேப்டன் மில்லர், மாவீரன், ஜப்பான், பத்து தல” என பல படங்கள் உள்ளதால் அடுத்த டிரைலர்களின் சாதனை இந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்பது உறுதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.