ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரு சக்கரவாகனத்தில் கவனக்குறைவாக நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அண்ணன் – தங்கை மீது, அதிவேகத்தில் வந்த கார் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இரு சக்கரவாகனம், மாருதி ஸ்விப்ட் காருக்குள் சொறுகிக்கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள நசியனூர், சாமிகவுண்டன்பாளையம் மெயின் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் 58 வயதான பூசாரி பூரணசாமி.
இவர் அந்தப்பகுதியில் உள்ள நசியனூர் மாரியம்மன் கோயில், மதுர காளியம்மன் கோயில், கருப்பராயன் கன்னிமார் கோயில் ஆகியவற்றில் பூஜையை முடித்து விட்டு, தனது தங்கை புஷ்பாவுடன், பெசினோ இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமிகவுண்டன்பாளையம் பிரிவு அருகே பின்னால் வரும் கார் குறித்த எந்த ஒரு முன் எச்சரிக்கையும் இல்லாமல், சாலையை கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில், பூசாரி பூரணசாமி, புஷ்பா ஆகியோர், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என்பதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அவர்கள் ஓட்டி வந்த பெசினோ இருசக்கர வாகனம், மோதிய வேகத்தில் காருக்குள் சொறுகிக் கொண்டது. இதனால் அந்த காரின் முன்பகுதி நசுங்கி போன தகர டப்பா போல உடைந்து நொறுங்கியது.
இருவரது சடலங்களையும் சித்தோடு போலீசார் கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சிறு கவனக்குறைவும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறி இருக்கின்றது, இந்த விபரீத விபத்து சம்பவம்.