புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் காஷ்மீரில் தீவிரவாதம் 168 சதவீதமும் இடதுசாரி தீவிரவாதம் 265 சதவீதமும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்தை சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது கடந்த 2016-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதுபோல 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்மீது இந்திய விமானப்படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதுபோன்ற பதில் தாக்குதலுக்கு பலன் கிடைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாத ஊடுருவல் காரணமாக ஏற்படும் வன்முறை 80% குறைந்துள்ளது. தீவிரவாதம் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது 89% குறைந்துள்ளது. 6 ஆயிரம் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்துள்ளன. தீவிரவாத நிதியுதவி தொடர்பான 94% வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 265% குறைந்துள்ளன.
இதுபோல வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு தீவிரவாத குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் முற்றிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அசாமில் 60% திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.