இந்தியாவில் உயரும் தற்கொலைகள்… தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி?! சில ஆலோசனைகள்!

சிறுசிறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வது அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது; சிறுதோல்விகளை கூட எதிர்கொள்வதில் சிக்கல் நிலவுகிறதா? தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், அதில் இருந்து மீள்வதற்கு ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் பெறும் முறைகள் என்ன? பார்க்கலாம்..

2021-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2020-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 7.6 சதவீதம் அதிகம். அதிகமான அளவில் தினக்கூலி தொழிலாளர்களும் (25.6%), இதற்கு அடுத்ததாக குடும்ப தலைவிகளும் (11.4%) இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2021-ல் 18,925 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதுவே 2020-ல் 16,883 ஆக இருந்தது. தனி நபர்கள் தற்கொலை செய்து கொள்வது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொள்வது எளிதான வாய்ப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

image
கடன் பிரச்சினையில் உள்ளவர்கள், குடும்ப தகராறில் சந்திக்கும் பிரச்சினை, மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பை சந்திக்கும் விவசாயிகள் போன்றோர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள். இந்திய அளவில், குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2021-ல் இந்தியாவில் குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை தொடர்பான 131 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில்  33 சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2020-ல் இந்திய அளவில் 122-ஆகவும் தமிழகத்தில் 22-ஆகவும் இருந்தது.

இதுபோன்ற தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இறக்கும் தற்கொலை சம்பவங்களில், பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி ஏற்படும் தற்கொலை சம்பவங்களை கவனித்த தமிழக அரசு அத்தகைய தற்கொலைக்கு காரணமானதாக கருதப்படும் 6 முக்கிய பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது. வாழ்க்கை குறித்த தவறான புரிதல், கணிப்புகளே தற்கொலைக்கு வழிவகுக்கின்றன என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, மகன்/மகளின் காதல் திருமணங்கள், வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தோல்விகள், தகுதியான வேலை கிடைக்காதபோது ஏற்படும் விரக்தி போன்றவை முக்கியக் காரணங்கள்.

image
ஒரு மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் எனும்போது, அம்மனிதனால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். எனவே, உணர்ச்சிப் பெருக்கு மனநிலை உடையவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் மனநிலையைச் சமநிலைப்படுத்தலாம்.

நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகளைக் கேட்பது, மகிழ்ச்சி தரும் நூல்களைப் படிப்பது, மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்பது, நேர்மறை எண்ணம் கொண்டவர்களோடு மனம்விட்டுப் பேசுவது, பிரார்த்தனை செய்வது என மனதைத் திசைதிருப்ப வேண்டும். முக்கியமாக, தனிமையைத் தவிர்ப்பது அவசியம். அடிக்கடி தற்கொலை எண்ணம் எழுந்தால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என யாரிடமாவது கூற வேண்டும். பின்பு மனநல மருத்துவர், மனநல சமூகப் பணியாளர், மனநல ஆலோசகர், மருத்துவ உளவியலாளர் ஆகியோரில் ஒருவரைப் பார்த்து சிகிச்சையும் ஆலோசனையும் பெறுதல் நலம்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தவற விடாதீர்: அதிக தற்கொலை நடந்த இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்தின் இடம் என்ன? மத்திய அரசு தகவல்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.