பெங்களூரு: பெங்களூருவில் நடந்த சினிமா காட்சிகளை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னட நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தான் நடித்த படத்தின் காட்சிகளை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. விழா மேடையில் தர்ஷன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒருவர் தர்ஷனை நோக்கி செருப்பை வீசினார்.
அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவரது தோள் மீது பட்டு கீழே விழுந்தது. அருகில் இருந்தவர்கள் தர்ஷனை அங்கிருந்து பாதுகாத்தனர். இருந்தும் செருப்பு வீசிய நபரை பிடிக்க, அவரது ரசிகர்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்து அந்த நபரை தேடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே ரசிகர் அமைதி காக்க வேண்டும் என்று தர்ஷன் வேண்டுகோள் விடுத்தார். இருந்தும் செருப்பு வீசிய நபரை கைது செய்ய வேண்டும் என்று தர்ஷனின் ரசிகர்கள் கோஷமிட்டனர்.
ஒருவழியாக அங்கு வந்த போலீசார், செருப்பு வீசிய நபரை பிடித்து அழைத்து சென்றனர். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதனால் ஆவேசமடைந்த யாரோ, அவர் மீது செருப்பை வீசியிருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.