தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள கனரக வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்களை தமிழக போலீஸார் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப வரும்போது பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு உள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டுகின்றனர். மேலும், தமிழகத்தில் இருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர் அங்குள்ள கடைகளில் இருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்துவிட்டு, உபயோகமில்லாத குப்பைகளை தமிழக எல்லைக்குள் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் இடைத்தரகர்கள் உதவியோடு கொட்டிச் செல்கின்றனர்.
ஏற்கெனவே கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து, கழிவுகளை கொட்டிய 7 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்துக்குள் புளியரை சோதனைச்சாவடி வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த வாகனங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
ஊத்துமலை பகுதியில் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், பயனில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கொண்டுவந்த புனலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திருநெல்வேலியைச் சேர்ந்த இடைத்தரகர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்மண்டலத்தில் பிரத்யேக தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புள்ள இடைத்தரகர்கள் விவரங்களை சேகரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.