பருவநிலை மாற்றத்தால் 30 நாடுகளில் காலரா பரவல் – WHO எச்சரிக்கை!

பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலக அளவில் காலரா பரவலானது, இதற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2022 ஆம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா கூறியதாவது:

நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், காலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதும் ஆகும். தொற்று மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது.

ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் காலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன. பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

பெரிய அளவிலான வெள்ளம், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பருவமழை மற்றும் தொடர்ச்சியான சூறாவளி புயல்கள் ஆகியவற்றுடன் இந்த தொற்றும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஹைதி, லெபனான், மாளவி மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் நடப்பு கோடை கால பெருவெள்ளத்திற்கு பின்பு, 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், இந்த சூழல் வரும் 2023 ஆம் ஆண்டில் விரைவாக மாறி விட போவதில்லை. ஏனெனில், தொடர்ந்து 3வது ஆண்டாக லா நினா என்ற பருவகால பாதிப்பானது தொடரும் என வானியல் ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளனர்.

அதனால், 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்ன நிலை காணப்பட்டதோ, அதே நிலையை மீண்டும் நாம் காண கூடும். இயற்கை பேரிடரால், வறட்சி மற்றும் மழை மற்றும் சூறாவளி புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை ஏற்படும். இவற்றில், கிழக்கு மற்றும் தென்பகுதி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசிய நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கெட்டுப் போன உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதனால், பரவக் கூடிய இந்த வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் ஏற்பட கூடிய காலரா தொற்றானது ஆண்டுக்கு, 40 லட்சம் பேரை பாதிக்கிறது. இதனால், 21 ஆயிரம் முதல் 1.43 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.