சென்னை: ரஃபேல் கை கடிகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வார்த்தை போர் நடந்து வருகின்றது.
சென்னையில் இன்று (டிச.20) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “ரஃபேல் கை கடிகாரத்தை வாங்கியதற்கான பில் உள்ளதா என்றுதான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நான் கேள்வி எழுப்பி இருந்தேன். அந்த கடிகாரத்தை அவர் தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின் வாங்கினாரா என்பது முக்கியமல்ல. அவர் வாங்கினாரா இல்லை யாராவது அவருக்கு வெகுமதியாகக் கொடுத்தார்களா என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.
மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. அண்ணாமலைக்கு மடியில் கணம் உள்ளது. முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கை கடிகாரத்திற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும். எனது இந்த கேள்வியை அடுத்து, ரஃபேல் கை கடிகாரத்திற்கான பில்லை தயாரிக்கக்கூடிய பணி தற்போது நடைபெற்று வருகிறது என அறிகிறேன். முதலில் அவர் அதனை வெளியிடட்டும். பிறகு, அடுத்தகட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை கூறுகிறேன்” என தெரிவித்தார்.
அதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பில் மட்டுமல்ல, எனது முழு வரவு செலவு கணக்குகளையும் தாக்கல் செய்கிறேன். ஆனால், முதல்வர் குடும்பம் உள்ளிட்ட திமுகவின் 13 அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் தயார் செய்துள்ளோம். வரும் ஏப்ரலில் அதை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பதில் தொடர்பாக ட்வீட் பதிவிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதில், “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.