விக்கிரவாண்டி அருகே குளத்தில் கழிவுநீரை விட எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்-அதிகாரிகள் சமரசம்- பரபரப்பு

திருக்கனூர் : விக்கிரவாண்டி அருகே கழிவுநீரை குளத்தில் விட எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா சித்தலம்பட்டு கடைவீதியில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பொதுப்பணித்துறை மூலம் சித்தலம்பட்டு-புதுக்குப்பம் கடைவீதி பகுதியில் யு வடிவ பாதாள சாக்கடை கட்டும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதன் மூலம் வெளியேறும் தண்ணீரை, பக்கத்தில் உள்ள திருமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.புதுக்குப்பம்-பிடாரிப்பட்டு பொம்மிரெட்டி குளத்தில் விடுவதற்காக பணி நடைபெற்றது.

பொம்மிரெட்டி குளத்தில் கழிவுநீரை வெளியேற்றினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை நிறுத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் புதுக்குப்பம், பிடாரிப்பட்டு பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் திருக்கனூர்-சித்தலம்பட்டு கடைவீதியில் உள்ள கழிவுநீரை திருமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.புதுக்குப்பம் கிராமத்தில் பொம்மிரெட்டி குளத்தில் விடும் பணியை கண்டித்து திருமங்கலம் பஞ்சாயத்து கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று காலை திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதில் பிடாரிப்பட்டு, திருமங்கலம், ஆண்டிப்பாளையம், புதுக்குப்பம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன், விக்கிரவாண்டி தாசில்தார் கோவர்த்தனன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும், அதே நேரத்தில் கழிவு நீர் குளத்தில் விடும் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளித்தனர்.  இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.