பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். வரும் பொங்கல் பண்டிகைக்கும் அதுபோன்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் வைப்பதற்காக, அரிசி, சர்க்கரை ஆகிய பொருள்களுடன் ரூ.1,000 ரொக்கத் தொகை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ரொக்கத் தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்த நிதித் துறை அதிகாரிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதையொட்டி, கூட்டுறவுத் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, வங்கிக் கணக்கு விவரம் இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ரொக்கத் தொகையை நியாயவிலைக் கடைகளிலேயே வழங்கலாம் என உணவுத் துறை சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இரண்டு துறைகளின் கருத்துகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.