மைசூரு: கர்நாடகா-தமிழக அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் வீரப்பன். இவருடன் இருந்தபோது, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் உள்ள பாலார் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இவ்வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா, சந்தனபாளையா கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானபிரகாஷ் உச்ச நீதிம்னறத்தில் மேல்முறையீடு செய்ததில், 2014ம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
கடந்த 29 ஆண்டுகளாக மைசூரு சிறையில் உள்ள ஞானபிரகாஷ் கடந்த மூன்றாண்டுகளாக குரல்வளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யகோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 69 வயதான குற்றவாளி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை பெறவும், கடைசி காலத்தை குடும்பத்தினருடன் கழிக்க வசதியாக நிரந்தரமாக விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று ஞானபிரகாஷ் விடுதலை செய்யப்பட்டார்.