சென்னை எக்மோர் பகுதியைச் சேர்ந்தவர் மரியம்மா ஜான் (65). இவர் சென்னை- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையம் அருகே வரும்போது கழிப்பறைக்கு சென்று விட்டு, மீண்டும் தன் இருக்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இருக்கையில் வைத்திருந்த பையில் இருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு 2 நபர்கள் ஓடினர். இதைக்கண்ட மரியம்மா ஜான், திருடன் எனக் கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் சிலர் அந்த 2 பேரையும் துரத்திப் பிடித்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை பறித்ததுடன், இருவரையும் நையப்புடைத்தனர்.
இதையடுத்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கவே, அங்கு வந்த போலீஸார் இருவரையும் பிடித்து உரிய முறையில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ராஜா (25), கரூரைச் சேர்ந்த கணேஷ்குமார் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் திருடிச் சென்ற கைப்பையில் 7 பவுன் தங்கச்சங்கிலியும், ரூ.5,000 ரொக்கப்பணம், செல்போனும் இருந்தது தெரிய வந்தது.

ரயில் பயணத்தின்போது நகைகளை அணிய வேண்டாம் என்று கருதி அதை கழற்றி கைப்பையில் மரியம்மா ஜான் வைத்திருந்தார். இதை அறிந்த அந்த இரு திருடர்களும் நைசாக கைப்பையுடன் எஸ்கேப் ஆக பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் சக பயணிகளிடம் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இருவரையும் ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகளையும், ரூ.5,000 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைதாக இருவர் மீதும் ஏற்கெனவே திருச்சி, கரூர் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.