கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி அருகே குதிரைபந்திவிளையை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி சகாய சுபா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சுபாவுக்கு இன்று பிரசவம் நடைபெற்றது. இந்த பிரசவத்தில் குழந்தை இறந்து விட்டதாகவும், சகாய சுபா மோசமான நிலையில் இருப்பதாகவும் கணவர் மகேஷிடம், மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தவறான சிகிச்கை மற்றும் கவனக்குறைவால் தான் குழந்தை இறந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “எனது மனைவி பிரசவத்திற்காக, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகபிரசவம் நடைபெறும் என்று முதலில் தெரிவித்தவர்கள், பின்னர் இங்கு முடியாது என்று கூறிவிட்டு ஆம்புலன்சு மூலம் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இன்று அதிகாலை நான்கு மணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், என்னிடம் 4.30 மணிக்கு குழந்தை இறந்து விட்டது என்று தெரிவித்தார்கள். இதையடுத்து, உங்கள் மனைவி சகாய சுபாவின் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான மருத்துவ சிகிச்சையாலும் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இறந்த குழந்தையின் உடலை காலை ஏழு மணிக்கு என்னிடம் கொடுத்து, எடுத்துச் செல்லும்படியும், எனது மனைவி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
ஆகவே, கவன குறைவாக செயல்பட்டும் தவறான மருத்துவ சிசிச்சை அளித்தும் தவறு செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.