சபரிமலையில் சோகம்; ஒரே மாதத்தில் 20 பக்தர்கள் பலி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில நாட்களில் 1 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன் பதிவு செய்திருந்ததால் சபரிமலையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, தரிசன நேரத்தை அதிகரித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. ஆனாலும் நாள்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்காதவாறு பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தவும் கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முதல் சபரிமலையில் தனிவரிசை முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நேற்று தரிசனத்திற்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 478 பேர் முன்பதிவு செய்து இருந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இருப்பினும் தனிவரிசை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்தது. சரம்குத்தி பகுதியில் இருந்து முன்பு பக்தர்கள் காத்திருப்பது 6 மணி நேரமாக இருந்த நிலை மாறி தற்போது 2 மணி நேரத்தில் தரிசனம் பெற்றனர்.

இந்நிலையில் மண்டல பூஜைக்காக பல்வேறு துறைகளின் ஆலோசனைக் கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்றது. சன்னிதான அதிகாரி விஷ்ணுராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது. மண்டல பூஜையையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் முன் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு மொழிகளில் அறிவிப்பு ஒலி பெருக்கி மூலம் இன்று முதல் வழங்கப்படும். பல்வேறு இடங்களில் பக்தர்கள் வழி முறைகள் பக்தர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெவ்வேறு மொழிகளில் அறிவிப்பு வழங்கப்படும்.

சரணபாதையில் மரக்கூல்ட்டம் முதல் சரம்குத்தி வரை எட்டு பகுதிகள் உள்ளன. 24 கியூ வளாகங்கள் மற்றும் பரந்த நடைபந்தல் அமைத்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு கழிப்பறைகள் மற்றும் ஓய்வெடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெரிய நடைபந்தல் பகுதியில் பெண்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அவசர காலங்களில் பயன்படுத்த ஒரு வரிசை காலியாக கோவில் நிர்வாகம் வைத்துள்ளது. வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு தவறாமல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையின் சோதனையை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலத்தில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை மட்டுமே, 24 பக்தர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் என தெரிய வந்துள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க பக்தர்கள் தவறாமல் தங்கள் மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொண்டு வரவும், உரிய நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் வேண்டும்.

மேலும், மருந்து மாத்திரைகளை பக்தர்கள் பயன்படுத்துவதை அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக பல்வேறு இடங்களில் மைக் மூலம் அறிவிப்புகள் செய்ய ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.