சுனாமியால் பாதிப்பு மக்கள் வெளியேறியதால் வெறிச்சோடிய கோட்டைமேடு கிராமம்

மயிலாடுதுறை : சுனாமியால் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் வெளியேறினர். இதனால் கோட்டைமேடு கிராமமே வெறிச்சோடியது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடற்கரை கிராமங்களான பழையார், கோட்டைமேடு, கொடியம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்கள் வங்க கடலில் கரைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர். இப்பகுதியில் மீனவர்களின் வரப்பிரசாதமாக இயற்கை மீன் பிடித்துறைமுகம் அமைந்துள்ளது.

திருச்சியிலிருந்து வரும் கொள்ளிடம் ஆறு முக்கொம்பில் பிரிந்து அதிலிருந்து அணைக்கரைக்கு வந்து வடிகாலாக வரும் கொள்ளிடம் ஆறு, வங்கக் கடலில் பழையாறு துறைமுகத்தையொட்டி கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதி அருகே திட்டுப்பகுதிகள் உள்ளன. அதில் ஒரு திட்ட பகுதிதான் கோட்டைமேடு கிராமம் ஆகும். கடந்த சுனாமியின் போது இங்கு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் இந்த திட்டு கிராமம் வாழ்வதற்கு தகுதியற்ற நிலையை இழந்து விட்டது. இங்குள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் செய்து வந்த இந்த கிராம மக்கள், மிகவும் அடிப்படையான தண்ணீர் வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியே வந்து குடியேறி விட்டனர்.

சுனாமி ஏற்பட்ட 2005ம் ஆண்டிலிருந்து கோட்டைமேடு வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு வாழ்ந்தவர்களின் வீடுகள் இன்றும் இடிந்த நிலையில் அடையாளமாக உள்ளது. கோயில் மற்றும் அங்குள்ள துவக்க பள்ளியும் இன்றும் அழகு மாறாமல் இருந்து வருகிறது. அருகே கொடியம்பாளையம் தீவு கிராமமும் உள்ளது. இந்த கிராமங்கள் ஒரு பக்கம் வங்கக்கடல் மறுபக்கம் கொள்ளிடம் ஆற்றின் பகுதி கிராமங்களை சூழ்ந்து உள்ளது. இவற்றின் நடுவில் இந்த கிராமங்கள் அமைந்துள்ளது.

இந்த கிராமங்களில் கொடியம்பாளையம் கிராமத்தில் மட்டும் தற்போது மக்கள் வசித்து வருகிறார்கள். கொடியம்பாளையம் கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கோட்டைமேடு கிராமத்தில் யாரும் தற்போது இல்லை.

இதனால் இந்த கிராமம் தற்பொழுது மனிதர்கள் யாரும் வசிக்காத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்பொழுது அப்பகுதியில் அப்பகுதி மக்கள் வாழ்ந்த அடிச்சுவாடாக பள்ளி கட்டிடம். குடியிருப்புகள், மின்கம்பங்கள், ஊர் பொது குளங்கள், அமைந்துள்ளன. மேலும் அப்பகுதியில் நினைவுச் சின்னமாக பழமையான காலங்களில் அப்பகுதியில் பெரிய கோட்டை இருந்தது. கோட்டை சிதைந்து அடையாளமாக அதன் அடிச்சுவர் இருந்து வருகிறது.

இந்த கிராமங்களை சுற்றிலும் அலையாத்தி காடுகள் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் பட குமூலம் இப்பகுதியை சுற்றிப் பார்த்து செல்கின்றனர்.எனவே இந்த கிராமத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.