மதுரை: கரூர் மாவட்டம் தாந்தோணி அருகே காளியப்பனூரைச் சேர்ந்தவர் பிரேம்நாத். பாமக மேற்கு மாவட்டச்செயலாளரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலாம்வலசு கிராமத்தில் சேவல்களின் கால்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டமாட்டோம் என உத்தரவாதம் அளித்து சேவல் சண்டைக்கு அனுமதி பெறுகின்றனர். அதை மீறி சேவல் சண்டை நடத்துகின்றனர். இதை பார்க்க வருபவர்களால் உள்ளூர் மக்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை சந்திக்கின்றனர். சூதாட்டத்தைப்போல பலர் பணம் கட்டி பந்தயம் நடத்துகின்றனர். எனவே, சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல், நெல்லை மாவட்டம், வள்ளியூர், தென்காசி, மேலூர் கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டைக்கு அனுமதி கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘இதில் மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.