நியூயார்க், சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக, அதன் உரிமையாளர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு தகுதியான முட்டாள் ஒருவர் கிடைத்ததும், இதிலிருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் சமூக வலைதளத்தை, உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மஸ்க் சமீபத்தில் வாங்கினார்.
இதைத் தொடர்ந்து, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய பராக் அகர்வால் உட்பட பலரை வேலையில் இருந்து நீக்கினார்.
தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்ற எலன் மஸ்க், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார்.
அவருடைய நடவடிக்கைகளுக்கு, பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வரு கின்றனர்.
இந்நிலையில், மஸ்க் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பை அறிவித்தார். இதில், ‘தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் நான் தொடரலாமா’ என அவர் கேட்டிருந்தார்.
இந்த வாக்கெடுப்பில், ௧.௬௭ கோடி பேர் பங்கேற்றனர். இதில், ௫௭.௫ சதவீதம் பேர், அவரை பதவியில் இருந்து விலகும்படி ஓட்டளித்தனர்.
இந்நிலையில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், எலன் மஸ்க் கூறியுள்ளதாவது:
ஓட்டெடுப்பில் பங்கேற்ற மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நான் விலகத் தயாராக உள்ளேன். இந்தப் பதவிக்கு தகுதியான ஒரு முட்டாளை கண்டுபிடித்ததும் நான் விலகுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்