"திருமணம் குறித்து நினைத்தாலே பயமாக இருக்கிறது!"- பாடகி வைக்கம் விஜயலட்சுமி

கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ (மலையாளத்தில் `செல்லுலாய்டு’) படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற தமிழ் டப்பிங் பாடல் மூலம் தமிழ் சினிமா பாடகியாக அறிமுகமானார். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைச் சொக்க வைத்தார். அதன் பிறகு எண்ணற்ற பாடல்கள் மூலமாக தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே இங்கே உருவாக்கிவிட்டார்.

வைக்கம் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு 2017-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சந்தோஷ் வீட்டில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை அடுத்து அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி அறிவித்தார்.

திருமணத்தின்போது வைக்கம் விஜயலட்சுமி

இந்த நிலையில் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அனூப், இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டராகவும் பணிபுரிந்து வந்தார். சில மாதங்கள் அவருடன் வாழ்ந்த வைக்கம் விஜயலட்சுமி பின்னர் அவரைப் பிரிந்துவிட்டார். கடந்த ஆண்டு முறைப்படி அவரை விவகாரத்தும் செய்துவிட்டார்.

இந்த நிலையில் நடிகை கெளதமி ஒரு ஊடகத்தில் தொகுத்து வழங்கிய ‘மனிதி வா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைக்கம் விஜயலட்சுமி, தனது திருமண வாழ்க்கை குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் பேசிய வைக்கம் விஜயலட்சுமி, “என்னைத் திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதை முழுநேரப் பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பியிருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்குப் பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் எப்போதுமே இசைக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை. அதனால் அவரைப் பிரிந்துவிட்டேன்” எனக்கூறியவர், “உங்களுக்குப் பல்வலி என்றால் அதைப் பொறுத்துக் கொள்ள முயல்வீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை” எனவும் மேற்கோள் கூறினார்.

வைக்கம் விஜயலட்சுமி

இந்த வெளிப்படுத்தல் குறித்து வைக்கம் விஜயலட்சுமியிடம் பேசினேன். “எனது திருமண வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து மலையாள மீடியாக்களில் பேசியிருக்கிறேன். கெளதமி மேடம் கேட்டதால் அதை நான் கூறினேன். என்னைத் திருமணம் செய்தவர் திருமணத்துக்கு முன்பு அடிக்கடி இங்கு வருவார், அடிக்கடி பேசுவார். திருமணத்துக்குப் பிறகு அவர் என்னை தேவையில்லாமல் ஓவராக கண்ட்ரோல் செய்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. என் அப்பா, அம்மாவை விட்டுவிட்டு தனியாக வரும்படி சொன்னார். அதிக டார்ச்சர் செய்ததால்தான் அவரைப்பற்றிச் சொல்லும்போது பல் வலி குறித்து மேற்கோள் காட்டிப் பேசியிருந்தேன். அவருடன் நான் ஆறு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தேன். அவரை முறைப்படி பிரிந்து ஓராண்டு ஆகிவிட்டது.

எதிர்காலத்தில் திருமணம் செய்வது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் திருமணம் குறித்து நினைத்தாலே பயமாக இருக்கிறது. அதற்காக ஆண்கள் அத்தனை பேரையும் பார்த்து பயம் அல்ல. சிலரைக் கண்டு பயமாக உள்ளது” என்பவர் தனது சில ஆசைகளையும் வெளிப்படுத்தினார். “இன்னும் நிறைய பாட வேண்டும் என விரும்புகிறேன். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளேன்.

வைக்கம் விஜயலட்சுமி

மலையாளத்தில் வெளியாக உள்ள ‘உப்புமாவு’ என்ற சினிமாவில் ‘சங்ஙாதி நந்நாயி…’ என்ற பாடல் பாடியிருக்கிறேன். பாடல் ரிலீஸ் ஆகிவிட்டது. படம் விரைவில் வெளியாக உள்ளது. நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. ரஜினி சாரைச் சந்தித்துப் பேசவேண்டும், அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என ஆசையாக உள்ளது. அதுபோல இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சாருடனும் சேர்ந்து ஒரு பாடல் பாட வேண்டும் எனவும் ஆசை இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.