திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி மதியம் 12.30க்கும், 1 மணிக்கும் இடையே நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடுக்கிவிட்டுள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 26ம் தேதி மாலை சன்னிதானத்தை அடையும்.
அன்று தீபாராதனை நடைபெறும் போதும், மறுநாள் மண்டல பூஜை தினத்தன்றும் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கி சன்னிதானத்தை அடையும் 26ம் தேதியன்றும், மண்டல பூஜை தினத்தன்றும், சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும். 27ம் தேதி இரவுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடையும். பின்னர் 28, 29 தேதிகளில் சபரிமலை கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இதற்கிடையே நேற்று காலையிலும் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். நேற்று 88,916 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் நேற்று மாலை 6 மணிக்குள்ளேயே 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கூடுதல் பஸ்களை இயக்க உத்தரவு: நெரிசலை குறைக்க சபரிமலைக்கு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று கேரள அரசு ேபாக்குவரத்து கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.