அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைத் தலைமை விவகார பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதற்கிடையே அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கும் தற்போது நடந்த வருகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 3-ம் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமி 2021-22-ம் ஆண்டுக்கான அ.தி.மு.க வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்திருந்தார். அதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று, தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்திலும் பதிவிட்டது.
இத்தகைய சூழலில், சென்னை வேப்பேரியில் ஓ.பி.எஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓ.பி.எஸ், “எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறாதா? நான்கரை ஆண்டுகளாக நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க தலைமை, “கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அ.தி.மு.க கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது ஏன்? நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும், பொருளாளராக திண்டுகல் சீனிவாசனையும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் இதுபோல செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும்” என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.