புதுடெல்லி: கரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்துவது, தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. மேலும், அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், உயரதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.