கொடைக்கானலாக மாறிய பழநி நகரம்: சாலையே தெரியாத பனிப்பொழிவால் வாகனஓட்டிகள் அவதி

பழநி: பழநியில் சாலையே தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பழநி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பழநி நகருக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாளொன்றிற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழநியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலையில் எதிரில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் தங்களது முகப்பு விளக்குகளை பகலிலேயே எரியவிட்டு செல்கின்றனர். பழநியில் நேற்று காலை 10 மணி வரை தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது.

குறிப்பாக மலைக்கோயில் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் கடுமையான  பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பழநி நகரம் சுற்றுலா நகரமான கொடைக்கானலாக மாறிவிட்டதோ என்ற ஐயம் பக்தர்களிடையே ஏற்பட்டது. எனினும் பக்தர்கள் பனிப்பொழிவினிடையே பழநி முருகனை தரிசித்து பரவசம் அடைந்தனர். இந்த கடுமையான பனிப்பொழிவால் வாகனஓட்டிகள் வாகனங்களை ஓட்ட இயலாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.